பத்துவயதுப் பையன் பாய்ந்து சாத்தினான்
ஏனென்று கேட்டேன் எடுத்துரைத்தான் பக்குவமாய்
வீட்டு நாய்க்கு வீதியிலிறங்கத் தடையாம்
விபச்சாரம் தான் காரணமாம்
அல்சேசன் அடுத்த வீட்டுப் பெட்டை நாயிடம்
அடிக்கடி போய்வருதாம்
”கறி போட்டும் கனகாசு செலவழிச்சும்
கறுமம்! சொல் கேக்குதில்ல”
குச்சொழுங்கையில் நின்று குமுறுகிறார் குமரேசன்
பெட்டைக் குட்டியென்றாற் பிரச்சினையென்று
குட்டி நாயைக்கூட கொல்லச் சொல்கிறார்
அஞ்சு பெட்டை பெத்த அன்னம்மாக்கா
நாய்களெல்லாம் சேர்ந்து நடுச்சந்தியில்
காரசாரமாய்க் கறுவிக் கொண்டன
“சாதி பேதம் நாம் பார்ப்பதில்லை - பார்த்ததாய்ச்
சரித்திரத்தில் குறிப்புமில்லை”
”காதலென்று சுற்றிவிட்டுக் கடைசியில்
கட்டக் காசு கேட்டு நிற்பதில்லை”
”கட்டுகிறேன்; கடைசிவரை காப்பாற்றுகிறேன் என்றுவிட்டு
கற்பு அழித்த பின்னே காணாமற் போவதில்லை”
என்றாலும் எம்நிலமை இப்படியாய் ஆனதுவேன் -நம்
பெண்ணினத்தைப் பேதம் செய்து
கொன்று குவிக்கிறாரே மனிதக் கூட்டம்
சொல்லாயோ தீர்ப்பை இறைவா
கொல்வாயே இவ் மனிதப் பேய்களை
தீர்ப்பிடும் நாள் - கடவுள் சொன்னார்
”உழைத்துயிர் கொடுக்கும் உங்களிற்கா இந்த நிலை
தவறு செய்யும் மனிதருக்குத் தண்டனை மரணம் தான்
வீதி வழி சென்று வெடுக்கெனக் குறுக்கிட்டு
வீழ்த்திடுக மனிதரை அவர் வினைப்பயனை அனுபவிக்க”

